கிழக்குப் பல்கலைக்கழகப் படுகொலைகள், 1990
கிழக்குப் பல்கலைக்கழகப் படுகொலைகள் அல்லது வந்தாறுமூலை வளாகப் படுகொலைகள் என்பது 1990 ஆம் ஆண்டு செப்டம்பர் 5 ஆம் நாள் இலங்கையின் மட்டக்களப்பு மாவட்டத்தில் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் தஞ்சமடைந்திருந்த தமிழ் அகதிகள் 158 பேர் இலங்கை இராணுவத்தினரால் சுற்றி வளைக்கப்பட்டுக் கைது செய்யப்பட்டுப் பின்னர் படுகொலை செய்யப்பட்ட நிகழ்வைக் குறிக்கும். அதே மாதம் 23 ஆம் நாள் மேலும் 16 பேர் கைது செய்யப்பட்டுக் கொண்டு செல்லப்பட்டனர். இலங்கை இராணுவத்தினரே இவர்களைக் கைது செய்ததாக நேரில் கண்ட சாட்சியங்கள் தெரிவிக்கின்றன. இப்படுகொலைகள் குறித்து விசாரணை செய்ய இலங்கை அரசு சனாதிபதி ஆணைக்குழு ஒன்றை நியமித்திருந்தது. விசாரணை முடிவுகள் சட்டவிரோதக் கைது மற்றும் படுகொலைகள் இடம்பெற்றுள்ளதை உறுதிப்படுத்தியது. அத்துடன் இதில் சம்பந்தப்பட்டோரையும் அது இனங்கண்டிருந்தது, ஆனாலும் இது குறித்து மேலதிக விசாரணைகள் எதுவும் இடம்பெறவில்லை.